மிஷ்கின் விஷாலுக்கிடையே ஏற்பட்ட மோதலுக்கு காரணம் என்ன?

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த திரைப்படம் ‘துப்பறிவாளன்’; இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர்கள் இருவருடைய கூட்டணியில் ‘துப்பறிவாளன் 2’ தயாராவதாக அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மிஷ்கினுக்கும், விஷாலுக்குமிடையே நடைபெற்ற மோதல்களால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

திடீரென இந்தப் படத்தை விஷாலே இயக்கி தயாரிப்பதாகவும், விரைவில் படப்பிடிப்பு நடத்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. கடந்த மார்ச் 11 ஆம் தேதி இந்தப் பிரச்னைகள் தொடர்பாக விஷால் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில்,

“நான் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான ஒரே காரணம் என்னவென்றால், புதுமுக தயாரிப்பாளரோ, அறிமுக தயாரிப்பாளரோ, எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, அவர்கள் ஷூட்டிங்கின்போது நான் பட்ட கஷ்டங்களையோ அல்லது ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் படும் கஷ்டங்களையோ அனுபவிக்க கூடாது என்பதற்காகத்தான்.

மிக முக்கியமாக, எந்தவொரு தயாரிப்பாளரும் இத்தகைய சோதனையை சந்திக்கக்கூடாது. நல்ல வேளையாக, திரைப்பட தயாரிப்பின் நுணுக்கங்களை அறிந்த பின்பு, இப்படத்தை கைவிட வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால், முன்னோக்கி சென்று இப்படத்தை நானே இயக்கி, என்னுடைய சிறப்பான பணிகளைச் செய்து, படத்தை வெளியிட்டு, இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் எட்டும் என்பதையும் உறுதிசெய்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

“இந்த அறிக்கையின் ஒரே நோக்கம், ஒருவரின் பெயரை கெடுப்பது அல்ல, ஆனால் இதுபோன்ற நபர்களுக்கு, வேறு எந்த தயாரிப்பாளர்களும் இரையாகாமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே,” என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த அறிக்கையில் பதினைந்து கட்டளைகளை மிஷ்கின் கூறியதாகவும், அந்தக் கட்டளைகள் என்ன என்பதையும் விஷால் அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும், துப்பறிவாளன் 2-ன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், கண்ணாமூச்சு என்கிற இணையத் தொடர் குறித்த விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மிஷ்கின் துப்பறிவாளன் 2 பிரச்னை குறித்து பேசும் போது,

“ஒட்டு மொத்த சமூகமும் விஷாலை மோசமாக பேசிய போது அவரை என் சகோதரனாக நினைத்து அவருக்கு உறுதுணையாக இருந்தேன். ஒரு வருடமாக யோசித்து துப்பறிவாளன் 2 கதையை எழுதினேன். துப்பறிவாளன் படத்திற்காக எனக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டது. துப்பறிவாளன் 2 கதையை முதலில் வேறு தயாரிப்பாளர் தான் தயாரிப்பதாக இருந்தது. விஷால் தான் இந்தப் படத்தை தானே தயாரிப்பதாகக் கூறினார்.

இத்தனை கடன் பிரச்னையிருக்கும்போது வேண்டாம் எனக் கூறியும் அவர் கேட்காமல் பிடிவாதமாக இருந்தார். கதையை எழுதுவதற்கு நான் கேட்டது ரூ. 7.50 லட்சம் மட்டுமே. ஆனால், அதில் நான் ரூ. 7 லட்சத்தை மட்டும் தான் செலவு செய்தேன். ஆனால், நான் திரைக்கதை எழுத ரூ.35 லட்சத்தை செலவு செய்ததாக விஷால் கூறியிருக்கிறார். இதை அவர் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். கதை மட்டும் எழுதுவதற்காக ஒருவன் 35 லட்சம் செலவழிக்கின்றான் எனில் அவன் இயக்குநராகவே தகுதியற்றவன்,” என்றார்.

மேலும், “விஷால் என் தாயை தவறான வார்த்தைகள் கூறி திட்டினார். அவர் அப்படி திட்டிய பிறகு அந்தப் படத்திலிருந்து எப்படி நான் விலகாமல் இருக்க முடியும். நான் செய்த ஒரே துரோகம் அவரிடம் அறத்துடன் இருந்தது தான். என் தாயை தவறான வார்த்தையால் விஷால் பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

இதுவரை தமிழ்நாட்டில் நான் மட்டும்தான் விஷாலை பத்திரமாகப் பார்த்துக் கொண்டேன். இனி, தமிழ்நாட்டை விஷாலிடமிருந்து பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்,” என தெரிவித்தார்.

அறிக்கை

மிஷ்கினின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ், “மிஷ்கின் சார் நாங்கள் எப்பொழுதும் உங்களையும், உங்கள் ஸ்கிரிப்டையும் நம்புகிறோம்.. நீங்கள் எப்பொழுது தயாராக இருக்கிறீர்களோ அப்பொழுது வேல்ஸூம் தயாராக உள்ளது,” என வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.