ஜோக்கர் ஆஸ்கர் உறுதி.

ஜோக்கர் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது ஹீத் லீஜர் தான், ஆனால், அவரின் இழப்பு இனி எந்த ஒரு நடிகரும் ஈடு செய்ய முடியாது என்ற கதாபாத்திரத்தை என்று தான் இருந்தது.

தற்போது மிக நம்பிக்கையாக கிளாடியேட்டர், ஹெர் ஆகிய படங்களில் நடித்த பீனிக்ஸை ஜோக்கராக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தனர், ஆரம்பத்தில் மாற்றுக்கருத்து இருந்தாலும், படத்தின் ட்ரைலர் வந்தவுடன் பீனிக்ஸிற்கு கண்டிப்பாக ஆஸ்கர் என்று சொன்னார்கள்.

அனைவரும் சொன்னது போல தான் உள்ளது பீனிக்ஸின் நடிப்பும், எந்த ஒரு சோகம் வந்தாலும், தடுமாற்றம், பதட்டம் வந்தாலும் உடனே சிரிக்க ஆரம்பித்து நிற்காமல் சிரித்துக்கொண்டு இருக்கும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டவர் பீனிக்ஸ்.

இந்த நோயால் அவரை எல்லோரும் இந்த சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்க, அவர் எவ்வளவு முயன்றாலும் சாமனிய மனிதர்களுடன் பயணிக்க முடியவில்லை, உடல்நலம் முடியாத தன் தாயை பார்த்துக்கொள்ளும் அன்பான மகனாக ஆர்தர்(பீனிக்ஸ்) ஒதுக்கப்படுதல், வேலையின்மை, வறுமை என அனைத்தையும் கடந்து மக்கள் கொண்டாடும் ஒருவனாக மாறுவதே இந்த ஜோக்கர்.

பீனிக்ஸ் இந்த படத்திற்காக பல கிலோ உடல் எடை குறைத்துள்ளார், கண்டிப்பாக ஹீத் லீஜருடன் ஒப்பீடு வரும், ஆனால், அந்த ஒப்பிட்டை எல்லாம் உடைத்து எறிந்துள்ளார் பீனிக்ஸ், காட்சிக்கு காட்சி நடிப்பில் சிக்ஸர் தான்.

அதிலும், ஸ்டேஜ் ஏறி ஜோக் சொல்ல வரும் போது வரும் சிரிப்பை அடக்குவது, அம்மாவிடம் சண்டைப்போட்டுக்கொண்டே இருக்கும் போது, நான் கோபமாக இல்லை என கன நேரத்தில் மாறுவது என புகுந்து விளையாடியுள்ளார், கண்டிப்பாக ஆஸ்கர் உறுதி.

படத்தின் இயக்குனர் Todd Phillips, இவர் தான் ஹாங்கோவர் சீரிஸை எடுத்தார் என்றால் சத்தியம் செய்தாலும் நம்ப முடியாது போல, அத்தனை ஜாலியான படத்தை கொடுத்துவிட்டு, இதில் இவ்வளவு சீரியஸான கதையை அத்தனை தெளிவாக எடுத்துள்ளார்.

படத்தில் பல விஷயங்களை குறிப்பாக மனிதனின் ஏற்ற தாழ்வு, பணம் இருப்பவன் இல்லாதவன் என ஒரு சில கருத்துக்களை போகிற போக்கில் கூறியுள்ளனர், அதிலும் கிளைமேக்ஸில் முர்ரே என்னும் தொகுப்பாளருடன் ஆர்தர் உரையாடும் காட்சி விசில் பறக்கின்றது.

மேலும், இதில் பேட்மேனாகிய புருஸ் வெயினை காட்டுகிறார்கள், அவருடைய பெற்றோர் இறப்பது, அதே நேரத்தில் ஜோக்கர் வளர்ச்சி என அடுத்தப்பாகத்திற்கான செம்ம லீட் விட்டுச்சென்றுள்ளனர்.

படம் கண்டிப்பாக ஜோக்கர் கதாபாத்திரத்தை விரும்புவோர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் விருந்து தான், அதே நேரத்தில் படத்தின் முதல் பாதி மிக மெதுவாக நகர்வதையும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும்.